அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனைக் கிராமத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 36ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, நேற்று (12.08.2026) வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது, 1990 ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 180-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன், கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டது.
இக்கொடூரச் சம்பவத்தின் 36ஆவது ஆண்டு நினைவையொட்டி, இன்று காலை வீரமுனை நினைவுத் தூபியில் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்றன.
இந்நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளின் நினைவாக நினைவுத் தூபியில் ஈகைச்சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மக்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தங்களது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக சிறப்புப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.