மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 96 கிலோமீற்றர் யானை வேலித் திட்டத்தில், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று(19.08.2026)ஆம் திகதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, சுற்றாடல் அமைச்சரிடம் இக்கடுமையான கேள்வியை அவர் எழுப்பினார்.
போரதீவுப்பற்று புறக்கணிப்பு.!
மட்டக்களப்பில் 96 கி.மீ தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், யானைத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கிலோமீற்றர் வேலி கூட திட்டமிடப்படாமைக்கான காரணம் என்னவென்று அமைச்சரிடம் நேரடியாகக் கேட்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக இதுவரை யானை வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் முடங்கிக்கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த மட்டக்களப்பில் புதிதாக 5 உப அலுவலகங்கள் உருவாக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், தற்போது போதுமான அலுவலகங்கள் இருப்பதாக அமைச்சர் கூறுவது தொடர்பிலும் சாணக்கியன் MP கேள்வி எழுப்பினார்.
திணைக்களத்தில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? புதிதாக வந்த வாகனங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டன? என்றும் அவர் வினவினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சுக்களாக இல்லாமல் உடனடியாகச் செயற்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், போரதீவுப்பற்று உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு யானை வேலித் திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.