செங்கலடி பொதுச் சந்தை கட்டிடம் உடனடியாக உடைக்கப்பட வேண்டும்! தீர்மானம் நிறைவேற்றம் -செ.நிலாந்தன்

பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடி கட்டிடத்தை உடனடியாக உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 15 வது சபைக் கூட்டத்தில் தவிசாளர் மு.முரளிதரன் அவர்களினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட தீர்மானத்தின் படி செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய உடைப்பதற்கு அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் 

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பிரதான நகரம் செங்கலடி நகராகும். 
இதனை அபிவிருத்தி செய்து வர்த்தக நகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உள்ளது.

ஏறாவூர் பற்றின் பிரதான சொத்தாக செங்கலடி பொதுச் சந்தை உள்ளது.
பல ஆண்டுகள் பழமையான செங்கலடி பொதுச் சந்தை கட்டிடம் தற்போது காலாவாதியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டடத் தொகுதியானது மக்கள் பாவனைக்கு உகந்தது இல்லை எனவும் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான என கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ள நிலையில் பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சபை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

அத்துடன் செங்கலடி பொதுச் சந்தை கட்டிடம் உடைப்பது தொடர்பாகவும், சந்தை கட்டிடத்திற்குள் உள்ள வர்த்தக நிலையங்களை அகற்றி அவர்களுக்கான மாற்று இடங்களை வழங்குவ தொடர்பாகவும் 
செங்கலடி நகரின் புதிய சந்தை கட்டிட வடிவமைப்பு அதற்கான திட்டங்கள் உள்ளிட்ட நகர அபிவிருத்தி திட்டங்களை  உருவாக்குவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
குறித்த குழுவில் தவிசாளர், பிரதேச சபை வட்டார உறுப்பினர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் நிவுணர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட்டு சிறந்த நவீன தரத்திலான சந்தை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கும், நகரில் உள்ள வீதி சமிக்ஞை விளக்கு பகுதி, பிரதான வீதிகள், சந்தை வீதி உள்ளிட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்து செங்கலடியை வர்த்தக நகரமாக மாற்றுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் செங்கலடி சந்தையின் இரண்டு மாடி கட்டிடத்தை உடைப்பதற்கும் அதில் உள்ள வர்த்தக நிலையங்களை அகற்றி அதற்கான மாற்று இடம் தெரிவு செய்வது, சந்தை கட்டிடம் வடிவமைப்பு உள்ளிட்ட செங்கலடி நகர அபிவிருத்தி குறித்து குழு அமைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுப்பதற்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதியது பழையவை