சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் - பிரித்தானியாவில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி அமைதி நடைப்பயணம் நடைபெற்றது!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணி மனித புதைகுழிக்கான நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானியாவின் லிவர்பூல் (Liverpool) நகரில் (30.08.2026) ஞாயிற்றுக்கிழமை விசேட அமைதி நடைப்பயணமும் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

​நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) லிவர்பூல் கிளையினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நடவடிக்கை, பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமானது.

லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தில் (Liverpool Lime Street Station - L1 1JD) ஆரம்பமான அமைதி நடைப்பயணம், தொண்டர்களின் வழிகாட்டலுடன் எவர்டன் பூங்காவை (Everton Park, Liverpool - L5 3PE) சென்றடைந்தது.

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக, சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் கூடிய பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு (ICJ) வலியுறுத்தியுள்ளதை இப்போராட்டம் முதன்மைப்படுத்தியது.

​உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை உலகிற்கு உரக்கச் சொல்லும் வகையில் அமைதி நடைப்பயணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் நினைவேந்தல் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வுப் பலகைகளை ஏந்திச் சென்றனர்.

​நடைப்பயணத்தின் நிறைவில் எவர்டன் பூங்காவில், செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து உறவுகளையும் நினைவுகூரும் விசேட நினைவேந்தல் சுடரேந்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

புதியது பழையவை