கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு, மண்டூர் - பலாச்சோலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பிரம்ம மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று (11.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக விமரிசையாகவும் பக்திப் பூர்வமாகவும் நடைபெற்றது.
கடந்த (03.08.2026)ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இப் பிரம்ம மஹோற்சவப் பெருவிழாவில், தினமும் எம்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியுலாக்களும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
விழாவின் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா நேற்று(11.08.2026)ஆம் திகதி பிற்பகல் விசேட பூஜைகளுடன் ஆரம்பமானது.
வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த கணபதிப் பெருமானுக்குச் சிறப்புத் தீபாராதனைகள் காட்டப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, "அரோகரா" கோஷத்துடன் சுவாமி தேரில் எழுந்தருளப்பண்ணப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் வடம் பிடிக்க, பக்திப் பரவசத்துடன் தேர் வீதியுலா இடம்பெற்றது.
மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் தேரை இழுத்தும், அர்ச்சனைகள் செய்தும் எம்பெருமானின் அருளைப் பெற்றனர்.
இப்பெருவிழாவின் நிறைவு நிகழ்வான தீர்த்தோற்சவம் இன்று (12.08.2026) ஆம் திகதி புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெறவுள்ளதுடன், மாலையில் கொடியிறக்கத்துடன் வருடாந்த பிரம்ம மஹோற்சவப் பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.