மட்டக்களப்பு மாவட்டம் கொம்மாதுறை இயற்கை எழில் கொஞ்சும் திவ்விய பதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா, பரிவார தேவதைகளுக்கான கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் வருஷாபிஷேக சங்காபிஷேக நிகழ்வுகள் (24.08.2026)ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி (30.08.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன.
ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வுகள் (24.08.2026) ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கருமாரம்பத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன்,(25.08.2026)ஆம் திகதி எண்ணெய் காப்பு மற்றும் பால்காப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கும்பாபிஷேகமும் சங்காபிஷேகமும்
தொடர்ந்து இன்று(26.08.2026( ஆம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணிக்கு ஆலய பரிவார தெய்வங்களான காளியம்மன், பேச்சியம்மன் மற்றும் கடல்நாச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் கூடாரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றன.
அன்றைய தினம் காலை 7.00 மணிக்கு கொம்மாதுறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடம், பவளிகாவடி என்பன எடுத்துவரப்பட்டு சங்காபிஷேகமும், பரிவார தெய்வங்களுக்கான கூடாரப்பூசைகளும் இடம்பெற்றன.
சுவாமி வீதி உலா மற்றும் சடங்கு நிகழ்வுகள்
நாளை(27.08.2026)ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பூசைகள் சிறப்பாக இடம்பெறும்.
(28.08.2026)வெள்ளிக்கிழமை பிற்பகல் அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து பெரியதம்பிரான் சுவாமியின் வீதி உலா கொம்மாதுறை கிராமத்தில் இடம்பெறவுள்ளது.
(29.08.2026)ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பூசைகள் நடைபெற்று, விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணும் நிகழ்வு இடம்பெறும்.
நிறைவு நாள் நிகழ்வுகள் (30.08.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு அரிசி எறிதல், சடங்கு, பூசாரிக்கு மூர்த்திகளுக்காக பாவாடை விரித்தல், பால்குடம், நேர்த்திக்கடன் செலுத்துதல், காளியம் மடை மற்றும் சுவாமி திருச்சடங்குடன் விழா இனிதே நிறைவடையும்.
அன்றைய தினம் திரு. திருமதி. உதயகுமார் சர்மி குடும்பத்தினரின் உபயத்தில் அன்னதான நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருச்சடங்கு உற்சவத்தில் அனைத்து ஆன்மீக அன்பர்களையும், அடியார்களையும் கலந்துகொண்டு ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் சுவாமியின் பேரருளைப் பெறுமாறு ஆலய நிர்வாக சபையினரும் பொதுமக்களும் அன்புடன் அழைக்கின்றனர்.