சார்ஜ் போட்டபடி செல்போனை மார்பில் வைத்து உறங்கிய இளைஞர் உயிரிழப்பு.!

மின்சாரத்தில் சார்ஜ் செய்தவாறு கையடக்கத் தொலைபேசியை மார்பில் வைத்து உறங்கிய 19 வயது இளைஞர் ஒருவர், செல்போன் வெடித்துச் சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இச்சம்பவம் வாழைச்சேனை, கருங்காலிச்சோலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (27.08.2026) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

​சம்பவத்தில் கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

நேற்று மாலை குறித்த இளைஞர் வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, தனது கையடக்கத் தொலைபேசியை மின்சார இணைப்பு மூலம் சார்ஜ் செய்தவாறே, அதனை மார்பின் மீது வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார்.

​அச்சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் திடீரென வந்தபோது, அதிக மின்னழுத்தம் காரணமாக தொலைபேசியின் பேட்டரி மிதமிஞ்சிய சூடாகி திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

​இதனால் மார்பில் பலத்த காயமடைந்த இளைஞரை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

​உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை