வாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை (14.08.2026) அரச பேருந்தும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளை, அதே திசையில் அதன் பின்னால் வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து எதிர்பாராதவிதமாக மோதித்தள்ளியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தின் போது மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரின் கால் பகுதியில் பலத்த எலும்பு முறிவு (உடைவு) ஏற்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.