கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பு உருவாக்கம்.!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்களின் ஊடகத் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் தொழில்சார் ஆற்றல்களை வலுப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப் பட்டறையும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பின் ஸ்தாபன நிகழ்வும் மட்டக்களப்பு “Balanze Media” நிறுவனத்தில் சனிக்கிழமை (15.08.2026)ஆம் திகதி  இடம்பெற்றது.

“Visual Editing & Visual Storytelling” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

பயிற்சியின் போது காட்சித் தொகுப்பு (Visual Editing), காட்சிக் கதைசொல்லல் (Visual Storytelling), ஸ்மார்ட்போன் ஊடாக தரமான காணொளிகளைப் பதிவு செய்தல், காணொளித் தொகுப்பு மற்றும் சமூக ஊடகங்களுக்கான உள்ளடக்கங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட நவீன ஊடகத் திறன்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணையத் தொல்லைகளைத் தடுப்பது தொடர்பில் வளவாளர் அ. அருள்சன்ஜீத்தினால் விரிவான விளக்கங்களும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஊடகவியலாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது எதிர்கொள்ளக்கூடிய இணையவழி அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்திரசேகரம் சந்திரபிரகாஷின் நீண்ட நாள் முயற்சியின் ஊடாகவும், சிரேஷ்ட பத்திரிகையாளர் கிருஷ்ணி கந்தசாமியின் ஒருங்கிணைப்பிலும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

பெண் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை ஊடகத்துறையில் அதிகரித்தல், அவர்களின் தொழில்சார் மற்றும் நவீன ஊடகத் திறன்களை மேம்படுத்துதல், ஊடகத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொள்வதற்கான வலையமைப்பை உருவாக்குதல், தொழில்சார் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆதரவை வழங்குதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பான ஊடகப் பங்களிப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இவ்வமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைப்பின் தலைவியாக ருக்க்ஷிதா மயூரனும், உப தலைவியாக ஜெனி ஜீவராஜும், செயலாளராக செல்வி வினாயகமூர்த்தியும், உப செயலாளராக நிமலேந்திரன் தட்சாயினியும், பொருளாளராக சபீனா சோமசுந்தரமும், உப பொருளாளராக லோகநாதன் ரிசாந்தினியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக துஷியந்தி சுரேஷ் மற்றும் அசோக் டெனுரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அமைப்பின் ஆலோசகர்களாக கிருஷ்ணி கந்தசாமி, சந்திரசேகரம் சந்திரபிரகாஷ் மற்றும் அ. அருள்சன்ஜீத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறுகிய கால ஒருங்கிணைப்பில் இணைக்கக்கூடியவர்களை இணைத்து ஆரம்ப நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர்களை இந்நிகழ்வில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. எனினும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் இவ்வமைப்பில் இணைந்து செயற்பட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் திறன்கள், தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுப்பதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும்.
புதியது பழையவை