ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை.!

பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமையான தடையை விதித்துள்ளது.

இவ்வாண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய சிறுவர்கள் சிலர், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவர்கள் கிண்டலுக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்த கரிசனைகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பரீட்சை முடிந்த பின்னர் சிறுவர்கள் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரிகாசத்திற்கு உள்ளாக்கும் வகையில் சுட்டிக்காட்டப்பட்டுப் பகிரப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதியைப் பெறாமல் சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிறுவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இத்தகைய காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
புதியது பழையவை