கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சுகாதார பெண் உதவியாளர்கள் 09 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் அணிந்து வந்த சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை இன்று காலை (17.08.2026) முன்னெடுத்து.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இவ்வெதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையிலும், அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.