உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பஸ்களை செலுத்திய இரு சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாகவும் அதிக வேகத்திலும் தனியார் பஸ்களை செலுத்தியதாகக் கூறப்படும் இரு சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இரண்டு தனியார் பஸ்கள், கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேனை பேரகொல்ல பகுதியில் நேற்று (15.08.2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

முன்னால் பயணித்த பஸ்ஸை பின்னால் வந்த மற்றொரு பஸ் கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது, பின்னால் வந்த பஸ் முன்னால் சென்ற பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரண்டு பஸ்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், பஸ்களில் பயணித்த எந்தவொரு பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தற்போது இடையிடையே கடும் மழை பெய்து வருவதால், வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதுடன், மண்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதனால், குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், விபத்துக்குள்ளான இரண்டு பஸ்களின் சாரதிகளும் கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற விதத்திலும் பஸ்களை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு பஸ்களும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை