கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனங்கள் மற்றும் அவர்களின் ஆடை பயன்பாடு தொடர்பில் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகவும், பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள அமைப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் விசாரணைகள் முடிவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் பதிவுகளை வெளியிடக்கூடாது என நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி இடைக்காலத் தடை உத்தர பிறப்பித்தார்.
மேலும், குறிப்பிடப்பட்ட 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.