கிளிநொச்சி மாவட்டத்தின்
பூநகரி பகுதியில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (25.09.2026) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
தனது மாடுகளை பராமரித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் சென்ற முதியவர், வழக்கம்போல தனது இரு வளர்ப்பு நாய்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அவருடன் சென்ற ஒரு நாய் மட்டும் வீட்டிற்கு திரும்பியிருந்த நிலையில், மற்றைய நாய் சம்பவ இடத்திலேயே முதியவரின் சடலத்திற்கு காவலாக நின்றுள்ளது.
அங்ஙனம் சடலத்தின் அருகே நின்ற நாயை அடையாளமாகக் கொண்டு தேடுதலைத் தொடர்ந்த குடும்பத்தினர், முதியவர் சடலமாகக் கிடந்த இடத்தை இறுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று காலை 11.55 மணியளவில் சடலம் மீட்டெடுக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.