சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் விடுதலைக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வரவேற்பு நிகழ்வு நேற்று(24.09.2026)ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் பொறுப்பதிகாரி யாசர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி (H.E. Yaser Abdulrahman Al-Hazme) அவர்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, அனோஜனின் விடுதலை விவகாரம் குறித்துப் பேசப்பட்டதுடன், அதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.
"அனோஜன் சிவராசாவின் விடுதலைக்கான அனைத்து சாத்தியமான வழிகளிலும் ஆதரவைத் திரட்டுவது எமது முதன்மையான பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ஆதரவும் மிகவும் முக்கியமானது."
மேலும், சவூதி அரேபியா இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையிலான இருதரப்பு நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ளார்.