மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நாடகமும் கருத்தரங்கும் சிறப்பாக நடைபெற்றது.!

​தேசிய சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று – மண்டூர் மெதடிஸ்த திருச்சபையின் “மலரும் மொட்டுக்கள்” சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு நாடகமும் கருத்தரங்கும் கடந்த (18.09.2026) ஆம் திகதி மட் / பட் / மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இத்திட்டத்தின் இயக்குனர் அருள்பணி டானியேல் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, முகாமையாளர் திரு. இ. உதயதாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், பாடசாலை அதிபர் திரு. வி. தேவகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இனிதே நிறைவேறியது.

​இந்நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்துகொண்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் திரு. சோ. கமல்ஹாசன் (LL.B) அவர்கள், சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, "கோடியர் களம்" நாடக ஆற்றுகைக் குழுவினரால் மாணவர்களுக்கான சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நாடகம் பாடசாலை வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது.

​குறித்த "மலரும் மொட்டுக்கள்" சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மண்டூர், தம்பலவத்தை, கனேசபுரம், வேத்துச்சேனை, மருங்கையடிப்பூவல், ஒல்லிமடு, புட்டியடித்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த 255 மாணவர்கள் கல்வி, சமூகம் மற்றும் உடல் ரீதியான தேவைகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக நன்மையடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை