சவூதி சிறையிலுள்ள அனோஜனின் விடுதலை வேண்டி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்புப் போராட்டம்!

​சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை, கருணை அடிப்படையில் சவூதி அரசும் மன்னரும் விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பில் நேற்றைய தினம் (04.10.2026) விசேட அமைதி வழி உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் நடைபெற்றது. மரண தண்டனை விளிம்பில் இருக்கும் அனோஜனை சவூதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டே இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

​மேலும், அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் உட்பட தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருக்கும் நோக்கில் இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

​இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் தெரிவிக்கையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

​அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார. இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை