செங்கலடி தளவாயில் தோணாக்கள் அடைப்பினால் வெள்ள அபாயம்! உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் உறுதி!

​மட்டக்களப்பு, செங்கலடி தளவாய் பகுதியில் விவசாய நிலங்கள் ஊடாக வெள்ளநீர் வழிந்தோடும் தோணாக்கள் அடைக்கப்பட்டுள்ளதால், இம்முறை தளவாய் கிராமங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, அடைக்கப்பட்டுள்ள நீர்வழிப்பாதைகளை உடனடியாகத் துப்புரவு செய்து தருமாறு பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
​இன்றைய தினம் (04.10.2026)ஆம் திகதி தளவாய் விநாயகர் கமநல விவசாய அமைப்பு, தளவாய் விளையாட்டுக் கழகம் மற்றும் பொது அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற விசேட கலந்தரையாடலின்போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

​செங்கலடி தளவாய் வட்டாரப் பகுதிகளில் வருடாந்தம் பெய்யும் பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தளவாய் ஏத்துக்கால் கண்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலைமையில், வெள்ளநீர் சீராக வழிந்தோடும் தோணாக்களை சிலர் அடைத்து வைத்துள்ளதால் நீர் வெளியேற முடியாத சிக்கல் உருவாகியுள்ளது.

​எதிர்வரும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் தோணாக்கள், வடிகான்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளைத் துப்புரவு செய்ய வேண்டும் எனவும், ஏத்துக்கால் கண்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நலன் கருதி அங்குள்ள சிறிய குளங்களைப் பெரிதாக்கி, இருபோக விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாய அமைப்பினர் வலியுறுத்தினர்.

​பொதுமக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
புதியது பழையவை