அம்பாறை மாவட்டம், கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மன் மகளிர் இல்ல பவுன்டேஷன் தலா 10,000 ரூபா வீதம் ஊக்குவிப்பு நிதியை வழங்கி வைத்துள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்ட 36ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளான எஸ். கீர்த்திகா, பி. தாருகா மற்றும் இ. எல்மிதா ஆகிய மூன்று மாணவிகளே தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு, ஹோமாகம பிரதேசத்திற்குட்பட்ட தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (13.10.2026) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அம்மன் மகளிர் இல்லத்தில் நடைபெற்றது.
அம்மன் மகளிர் இல்ல பவுன்டேஷன் பணிப்பாளர் வி. வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூன்று மாணவிகளுக்கும் தலா 10,000 ரூபா ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தாமரை மற்றும் அம்மன் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பயிற்றுவிப்பு ஆசிரியர் வி. டினேஸ்ராஜ், அம்மன் மகளிர் இல்ல முகாமையாளர் எம். குமுதினி, பொருலாளர் கே. ராதிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.