நாட்டில் இன்று முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் மட்ட அடுக்கில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இன்று மாலையிலிருந்து நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45- 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புதியது பழையவை