மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் வாவியில் குதித்து யுவதி தற்கொலை முயற்சி.!

​மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் நேற்று இரவு (13.10.2026) வாவியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 19 வயது யுவதி ஒருவர், மீனவர்களின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​
​செவ்வாய்க்கிழமை (13.10.2026)ஆம் திகதி  இரவு 8.00 மணியளவில் கல்லடி பழைய பாலத்திற்கு வந்த குறித்த யுவதி, தனது செருப்பு, கைப்பை மற்றும் குடை ஆகியவற்றை பாலத்தின் மேல் கழற்றி வைத்துவிட்டு, திடீரென வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

​அதேவேளையில் அருகில் வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயற்பட்டனர். 

அவர்கள் நீரில் தத்தளித்த யுவதியை மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.

​தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார், 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

​தற்கொலைக்கு முயன்ற யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும், அவர் இந்த விபரீத முடிவை எடுப்பதற்கான காரணங்கள் என்னவென்பது குறித்தும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

​தொடரும் தற்கொலை முயற்சிகள் மற்றும் புள்ளிவிபரங்கள்...

​இதே கல்லடி பாலத்தில் இருந்து கடந்த மாதம் இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

​இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டப் பொலிஸ் பிரிவு புள்ளிவிபரங்களின்படி, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை மாவட்டத்தில் 90 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை