மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிராமத்தைச் சேர்ந்த பன்முக ஆளுமையான மருத்துவர் இ. சிறிகிருஷ்ணன் அவர்கள், தேசிய இலக்கியப் போட்டியில் சிறப்பான சாதனையைப் படைத்து தேசிய இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களமும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடத்திய நாடளாவிய கலாசார இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற இவர், ஐந்து இலக்கியப் பிரிவுகளிலும் பிரதேச மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சிறுகதை, சிறுவர் கதை, புதுக்கவிதை, மரபுக் கவிதை மற்றும் திரைப்பட விமர்சனம் ஆகிய ஐந்து பிரிவுகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி முதலாம் இடங்களைப் பெற்றமை இவரது இலக்கிய ஆளுமையின் தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மாவட்ட மட்டப் போட்டிகளில் மரபுக் கவிதை, திரைப்பட விமர்சனம் மற்றும் சிறுவர் கதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாம் இடங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்.
தேசிய மட்டத்திலும் தனது திறமையை நிரூபித்து வெற்றியீட்டியதன் மூலம் தேசிய இலக்கிய விருதைப் பெற்றுக்கொள்ளும் பெருமையைத் தனதாக்கிக் கொண்டார்.
கடந்த (14.11.2026 )ஆம் திகதி அன்று பத்தரமுல்லை சுஹுருபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே. எஸ். தில்ஹானி மற்றும் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர ஆகியோரின் தலைமையில் இவருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இலக்கியத்துறையில் மட்டுமன்றி கல்வி, சித்த மருத்துவம், ஆன்மீகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் இவர், ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்.
மேலும், அரச குரு பிரதீபா பிரபா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் தொடர்ச்சியான ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார்.
எருவில் மண்ணில் இருந்து தேசிய மட்டம் வரை தனது ஆளுமையையும் திறமையையும் நிலைநாட்டியுள்ள மருத்துவர் இ. சிறிகிருஷ்ணன் அவர்களின் இச்சாதனை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், எருவில் மண்ணின் பெருமைக்கும் மேலும் பல சாதனைகளைப் படைக்க மருத்துவர் இ. சிறிகிருஷ்ணன் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!