யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா..?

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாவட்டம் பாரபட்சமாக நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அதிகரித்துள்ளதால், வீடுகள், விவசாயப் பயிர்கள் சேதமடைவதுடன், மனித உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன. 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு அண்மைக்கால உதாரணமாக, போரதீவுப்பற்று பிரதேசத்தின் 35ஆம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேசு இராசலெட்சுமி (59 வயது) என்ற பெண் கடந்த 05.11.2026 அன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 13.11.2026ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் போரதீவுப்பற்றுப் பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலையடிவட்டை  வட்டாரத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட மின்குமிழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (14.11.2026) நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் அப்பகுதி மக்கள் தமது பிரச்சினைகளையும் யானை – மனித மோதல் தொடர்பான பாதிப்புகளையும் எடுத்துரைத்தனர்.

இதன்போது மக்களிடையே உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 கிலோமீற்றர் நீளமான யானை வேலி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்தத் திட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசம் உள்வாங்கப்படவில்லை.

இது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட மட்டக் கூட்டங்களில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி, கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட யானை வேலி அமைக்கும் பணிகள்கூட இதுவரையில் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஏழு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை (Elephant Control Units) அமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இதற்காக வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை, செங்கலடி, கிரான், வாகரை மற்றும் ஓட்டமாவடி ஆகிய ஏழு பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

எனினும், தற்போது அரசாங்கத்தினால் ஐந்து யானைக் கட்டுப்பாட்டு அலகுகள் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் வெல்லாவெளி மற்றும் கிரான் ஆகிய இரண்டு பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட ஏழு அலகுகளையும் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, கிழக்கு மாகாணப் பிராந்தியத்திற்கு மொத்தமாக 38 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஏனைய 33 மோட்டார் சைக்கிள்களும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கீட்டிலும் வெல்லாவெளி மற்றும் கிரான் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் 14 யானைக் கட்டுப்பாட்டு அலகுகள் இயங்கி வருகின்ற நிலையில், புதிதாக மேலும் ஒன்பது அலகுகள் வழங்கப்படுவதன் மூலம் அங்கு மொத்தமாக 23 அலகுகள் அமையவுள்ளன.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்மொழியப்பட்ட ஏழு அலகுகளில் இரண்டு நீக்கப்பட்டு ஐந்து அலகுகள் மாத்திரமே வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணப் பிராந்தியம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இரு மாவட்டங்களிலும் நிலவும் தேவைகளின் அடிப்படையில் வளங்கள் சமத்துவமாகவும் நியாயமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் வேலைத்திட்டங்களைக்கூட நடைமுறைப்படுத்துவதில் இவ்வாறான இழுபறி நிலை காணப்படுகின்றபோது, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் நாம் எவ்வாறு முன்னேற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன், பிரதேச சபை உறுப்பினர்களான , ம. கோபிநாத், முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ம.சுகிகரன் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வட்டார உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக உயிரிழப்புகளையும் சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்திவரும் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் யானை வேலிகள், யானைக் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் தேவையான வளங்களை வழங்கி மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே போரதீவுப்பற்று மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

புதியது பழையவை