மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை பொதுநூலக வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாத பரிசளிப்பு விழா கடந்த (13.11.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் பாலையடிவட்டை பொதுநூலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாலையடிவட்டை பொதுநூலக வாசகர் வட்டத்தின் தலைவி செல்வி N. டிலக்சினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் மற்றும் உப தவிசாளர் த. கயசீலன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், நூலக உதவியாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகள் வரவேற்பு, வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் தலைமையுரை உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தவிசாளர் உரையில் தெரிவிப்பு..!
இதன்போது உரையாற்றிய போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன்,
பாலையடிவட்டை வட்டாரத்தின் அபிவிருத்திக்காக இதுவரை கூடுதலான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2027ஆம் ஆண்டிலும் இப்பகுதிக்கு மேலும் அதிகளவிலான நிதியை ஒதுக்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதேச சபை கூடுதலான நிதியைப் பெற்றுக்கொண்டு, பத்து வட்டாரங்களுக்கும் நிதியைப் பகிர்ந்தளித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதேபோன்று 2027ஆம் ஆண்டில் எமது பிரதேசத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன், பொதுநூலகங்களையும் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
உப தவிசாளர் உரையில் முக்கிய அறிவிப்பு.!
தொடர்ந்து உரையாற்றிய பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன்,
பாலையடிவட்டை வட்டாரத்தில் காணப்படும் வீதிப் பிரச்சினைகள், முச்சக்கரவண்டி தரிப்பிட வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள், மயானம் மற்றும் அஞ்சலிப் பீடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் காட்டு யானைகளின் தொல்லை போன்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தவிசாளரின் ஒத்துழைப்புடன் கூடுதலான நிதியைப் பெற்று மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரதேச சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக, 32 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த எமது சபைக்குச் சொந்தமான பொதுச்சந்தையை மீட்டெடுத்துள்ளோம்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் குறித்த பொதுச்சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய பொதுச்சந்தையாக மாற்றியமைத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கிராம மக்களும் கிராம மட்ட அமைப்புகளும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவுத் தேடலை விரிவுபடுத்துதல் மற்றும் நூலகச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.