உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும் .





மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் ஆரம்ப கால கஷ்டங்களிலிருந்து மீண்டு உழைக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு அரசாங்கமும் எல்லாத் திணைக்களங்களும் தங்களாலான உதவிகளை செய்கின்றன. எனவே, எமது மக்கள் உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிப்பிஞ்சா செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் மாங்கேணியில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் செய்யப்படும் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் பாரிய சிக்கல்களை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வந்தனர்.தற்போது பிப்பிஞ்சாவுக்கு உலகளாவிய ரீதியில் அது வர்த்தகப் பொருளாக மாறியுள்ளது. அதற்கு தகுந்த மண் வாகரையில் கிடைத்திருப்பதன் காரணமாக பெருமளவு பொருளாதாரத்தை பெற்றுத்தரக்கூடிய பொருளாக பிப்பிஞ்சா மாறியுள்ளது.

எதிர்காலத்தில் இதேபோன்று தானிய உற்பத்திகளை இப்பகுதியில் மேற்கொள்வதற்கு எங்களால் முடிந்த உதவிகள் வழங்கப்படும்.இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை அறிவூட்டி தெளிவூட்டி அவர்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொடுத்து இந்த மண்ணிலே அவர்களை வாழ வைப்பதுதான் என்னுடையதும் இந்த அரசாங்கத்தினுடைய எதிர்பார்ப்பாகும். அதனை நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வோம்.

இங்கு விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து தீர்த்து வைப்போம்.

இப்பகுதி மக்கள் உழைத்து சேமிக்கின்ற மக்களாக மாற வேண்டும். அதை நாங்கள் கண்கூடாக பார்த்து மகிழ்வதுதான் எங்களது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

புதியது பழையவை