மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதிர்க்கப்படுவதும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நடுநிலை வகிக்கப்படுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையால் சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாத நிலையில் ஒரு சில வாரங்களுக்கு சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சேவை நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான தீர்மானம் இன்றைய சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (23.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09ஆவது சபை அமர்வு பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்றது.
சபைச் சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற அமர்வில் தவிசாளர் உரை, மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான உறுப்பினர்களின் பிரேரணைகள் அடங்கலாக தவிசாளரினால் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று குறித்த பிரரேணைகள் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத் தலைமையாகக் கொண்ட கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 05 பேர் எதிராகவும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 03 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 08 உறுப்பினர்களும் பிரேரணையை ஆதரித்தனர்.
16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 08 உறுப்பினர்கள் எதிர் நிலைப்பாட்டில் உள்ளமையால் குறித்த பிரேரணைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும், குறித்த பிரேரணை எதிர்ப்பிற்கான காரணங்கள் உறுப்பினர்களால் சொல்லப்படாத நிலையிலும் சபையின் சேவை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத நிலையில், பிரேரணைகளை நிறைவேற்றும் போதே சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியும் என்பதால் சபையின் சேவை நடவடிக்கைகளை ஓரிரு வாரத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதாகத் தவிசாளர் இதன்போது சபையில் தெரிவித்தார்.
இதன் பின்னர் இது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில்,
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தாங்கள் ஏன் இந்தப் பிரேரணைகளை எதிர்க்கின்றோம், நடுநிலை வகிக்கின்றோம் என்ற காரணத்தைக் கூறி இதனை நிராகரித்தால் அதில் திருத்தங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியும். ஆனால் இவ்வாறு எடுத்த எடுப்பில் பிரேரணையை நிராகரிப்பது எமக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பதுடன், வட்டார ரீதியிலும் எவ்வித பணிகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.