மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30.03.2026)திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை ஊடாகக் காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து இந்த அகழ்வுப் பணிக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிவான் ரி. பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணியின் போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், காணாமற்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஊழியர்கள், பாதுகாப்பு கடமைகளுக்காகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தத்தமது அன்புக்குரியவர்களின் எச்சங்கள் அடையாளம் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழ்வுப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.