வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகப் பார்க்கப்படும் "சிவப்பு சித்திரை" நினைவு தினத்தின் 22-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், (10.04.2026)ஆம் திகதி வெருகலாற்றங்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபி மற்றும் வெருகல் மலைப் பூங்கா பகுதியில் மிகவும் உணர்ச்சிகரமான முறையில் நடைபெற்றன.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாலை வேளையில், வெருகலாற்றங்கரையில் இடம்பெற்ற துயரமான சகோதரப் படுகொலையில் உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூரும் முகமாக ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் "சிவப்பு சித்திரை" எனத் தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
ஆலய வழிபாடுகளும் மக்கள் பணியும்
நினைவேந்தல் நிகழ்வுகள் (10.04.2026)காலை வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளுடன் தொடங்கின.
உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த பொதுமக்களுக்காக தாக சாந்தி மற்றும் அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஈகைச் சுடர் மற்றும் மலர் அஞ்சலி
பூஜைகளைத் தொடர்ந்து, வெருகல் மலைப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உயிரிழந்த மறவர்களின் நினைவாக ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
அவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியின் மூலம் தியாகங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள்
இந்த உருக்கமான நிகழ்வில், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
"இது வெறும் நினைவு தினம் மட்டுமல்ல, காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுச் சுவடு. தியாகங்களும் இழப்புகளும் மறக்கப்படக் கூடாதவை என்பதை இந்த நாள் உணர்த்துகிறது" என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
22 ஆண்டுகள் கடந்த போதிலும், வெருகலாற்றங்கரையில் இன்றும் அந்த நினைவுகள் துயரமும் பெருமையும் கலந்த ஒரு உணர்வாகவே கிழக்குத் தமிழர்கள் மத்தியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.