இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்றின் உடைவு, பருவமழை செறிவடைதல் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிகளவிலான ஈரப்பதன் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தற்போது பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
இக்கோரத் தாண்டவம் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியரும், முன்னணி காலநிலையியலாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் அடுத்த சில நாட்களுக்கு மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அவர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மணிக்கு பல கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பாரிய நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
இலங்கையில் பொதுவாக மே மாதத்தின் இறுதிப் பகுதிக்கும் ஜூன் மாதத்தின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் வெள்ள அனர்த்தங்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது வழமையான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது என்பதைப் பேராசிரியர் பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக 2001, 2003, 2006, 2010, 2014, 2016, 2019, 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இதே காலப்பகுதியில் இப்பகுதிகள் பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, பேரழிவுகளைச் சந்தித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
முக்கிய வரலாற்றுப் பதிவு.!
குறிப்பாக, கடந்த 2003ஆம் ஆண்டு மே 16ஆம் திகதிக்கும் 25ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேசத்தையே உலுக்கிய பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசர பாதுகாப்பு வழிமுறைகள்.
ஆற்றங்கரைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள், வெள்ள நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான உயரமான இடங்களை நோக்கி நகரத் தயாராக இருத்தல் வேண்டும்.
அத்தியாவசியப் பாதுகாப்புப் பை,அவசர கால மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், டார்ச் விளக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நீர் புகாத பைகளில் (Waterproof bags) பத்திரப்படுத்தி வைக்கவும்.
நிலச்சரிவு அபாயம்.
கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்கள் நில வெடிப்பு, மரங்கள் சாய்வு, திடீரென சேற்று நீர் ஊற்றெடுத்தல் போன்ற நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடங்களில் இருந்து வெளியேற வேண்டும்.
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மின் கசிவு அபாயத்தைத் தவிர்க்க உடனடியாக பிரதான மின் இணைப்பை (Main Switch) துண்டிக்கவும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அடுத்த சில நாட்களுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வானிலை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்து, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா மேலும் அறிவுறுத்தியுள்ளார்.