கடந்த மே 20 அன்று மட்டக்களப்பு நூலகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவிற்காக, ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் அடங்கிய பிரம்மாண்டமான நடுகை கல் ஒன்று காத்தான்குடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முற்பணம் செலுத்தப்பட்டு, மூன்று மொழிகளிலும் செதுக்கித் தயாராக வைக்கப்படிருந்தது. கிட்டத்தட்ட 5 \times 4 அடி அளவில் மூன்று கற்களாக இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
அமைச்சரின் அதிரடி உத்தரவு.!
இந்த விபரத்தை அறிந்த கைத்தொழில் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுனில் ஹெந்துன்னெத்தி, மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட பெயர்களைக் கல்வெட்டில் பொறிக்கக் கூடாது என கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தனிநபர் விளம்பரங்களைத் தவிர்த்து, பதவிகளின் பெயர்களை மட்டுமே சுருக்கமாக (Short) இடம்பெறச் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சரால் எழுதிக்கொடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் அடிப்படையில், அவசர அவசரமாகப் புதிய கல்வெட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பெயர்கள் ஏதுமின்றி பதவிப் பெயர்களுடன் மட்டும் நூலகத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் சர்ச்சை மற்றும் நிதி வீணடிப்பு.!
தனிநபர் பெயர்கள் தவிர்க்கப்பட்ட புதிய அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டு, அரசியல்வாதிகளின் நீண்ட பெயர்ப்பட்டியலுடன் வடிவமைக்கப்பட்ட முந்தைய கல்வெட்டுகள், தற்போதும் காத்தான்குடி வர்த்தக நிலையம் ஒன்றிலேயே தேங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. மாநகர சபையின் நிதி இவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளமை குறித்து உள்ளூர் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.