மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது.
சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு, வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார். தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில், விடுதி அறையிலிருந்த மெத்தை திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனால் அறை முழுவதும் அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த நச்சுப் புகையை சுவாசித்தமையால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தைகள் இருவரும் அறையினுள்ளேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.