உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாலஸ்தான பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது!

​வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு மாகாணத்தின் ஆன்மீக பூமியான உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில், மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்பக்கட்ட முக்கிய நிகழ்வான வாலஸ்தான (பாலஸ்தாபன) கும்பாபிஷேகம் கடந்த (19.05.2026 )அன்று பக்திப் பெருக்குடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

​ஆலயத்தின் திருப்பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு, மூலமூர்த்திகளின் அருள் சக்தியினை தற்காலிகமாக வாலஸ்தான மூர்த்திகளுக்கு மாற்றி அமைக்கும் இந்த விசேட பூஜைகள் வேதாரண்ய வித்துவான்களின் வழிகாட்டலில், ஆலய பிரதம குருக்களின் தலைமையில் சாஸ்திரோக்தமாக நிகழ்த்தப்பட்டன.

​வாலஸ்தான பூஜையை முன்னிட்டு விசேட கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் திரவியாகுதிகள் அடங்கிய யாகபூஜைகள் விமரிசையாக நடைபெற்றன.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, வாலஸ்தான மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

​இந்த ஆன்மீக நிகழ்வில் அம்பாறை மாவட்டம் மட்டுமன்றி, தீவின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமான் முருகனின் அருளைப் பெற்றனர்.
​வாலஸ்தான பூஜை நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆலயத்தின் கர்ப்பக்கிருஹம் மற்றும் ஏனைய கோபுரங்களுக்கான புனரமைப்பு மற்றும் வர்ணப்பூச்சு வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

திருப்பணிகள் யாவும் நிறைவுற்றதும், மகா கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை