அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை எதிர்காலத்தில் ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பயனாளிகளின் தகவல்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2023 ஆம் ஆண்டில், அஸ்வெசும திட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் பேர் உதவித்தொகைகளை பெற்றிருந்தனர்.
இந்நிலையில், 2025 ஏப்ரல் மாதத்தில் நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இடம்பெற்றிருந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்றாவது பிரிவான நலிவடைந்தோர் பிரிவில் உள்ள 4 இலட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தகுதி அடிப்படையில் மீண்டும் அஸ்வெசும உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்துள்ளார்.