இறுதி யுத்தத்தின் போது கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்தார்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு நேற்று (19.06.2026) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும்.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழருக்கு அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு இலங்கையில் வைத்தே சீனா இரு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கியதாக முன்னாள் கடற்படை தளபதி கொலம்பகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
அவருடைய கருத்து மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் மீது அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசு பயன்படுத்திய இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
அது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட கொத்தணி மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன யார் அதனை வழங்கியிருப்பார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் கடற்படை தளபதியை சர்வதேச ரீதியாக விசாரணை செய்ய வேண்டும்.
செம்மணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் சுமார் 380 ஐ தாண்டி உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு செம்மணி ஆதாரமாக இருக்கிறது.
அதேபோன்று முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களுக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது அது தொடர்பிலும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் எனவும் வேலன் சுவாமிகள் மேலும் தெரிவித்தார்.