மட்டக்களப்பு போரதீவுப்பற்று சின்னவத்தை பொது மயானம் சிரமதானம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமும், கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியுமான சின்னவத்தை கிராமத்தில் உள்ள பொது மயானம், போரதீவுப்பற்று பிரதேச சபை நிதியின் மூலம் துப்புரவு செய்யும் பணிகள் (08.07.2026)ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நீண்ட கால அச்சுறுத்தலாக இருந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

​வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சின்னவத்தை வட்டாரத்தில் அமைந்துள்ள இப்பொது மயானம், நீண்ட காலமாக எவ்வித பராமரிப்பும் இன்றி அடர்ந்த காடாகக் காட்சியளித்தது. 

இதன் காரணமாகச் சின்னவத்தை, நெடியவட்டை மற்றும் ஆனைகட்டியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

மேலும், மயானத்தில் மண்டியிருந்த அடர்ந்த காடுகளினால் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும் மிகத் தீவிரமாகக் காணப்பட்டது.

​இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையினை ஏற்று, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் நேரடி அனுமதியோடும், சின்னவத்தை வட்டார உறுப்பினர் காத்தமுத்து யோகராசா அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழும் இத்துப்புரவுப் பணிகள் சபை நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

​பிரதேச சபையின் கனரக வாகனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இத்துப்புரவுப் பணியினை மேலும் வலுப்படுத்தும் வகையில், நேற்றைய தினம் சிரமதான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இன் நிகழ்வின் போது 
​போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் தங்கராசா கயசீலன்,
​வெல்லாவெளி வட்டார உறுப்பினர் வரதராஜா 
​மற்றும் கிராமத்தின் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கினர்.

​இந்நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர்.

​"போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலும் உள்ள அனைத்து மயானங்களையும் பிரதேச சபை நிதியின் மூலம் துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்தோடு, அவற்றுக்குத் தேவையான மதில் சுவர்கள் மற்றும் நீர் வசதிகள் உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

​மயானத்தில் மண்டியிருந்த காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் குறைந்து, தங்களுக்குப் பெரும் பாதுகாப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்த கிராம மக்கள், தங்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றிய தவிசாளர் உட்பட அனைத்து சபை உறுப்பினர்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
புதியது பழையவை