தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், (30.07.2026) இன்று காலை இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தோற்சவத்துடன் மிக விமர்சையாக நிறைவு பெற்றது.

​கடந்த சில தினங்களாகப் பாரம்பரிய முறைப்படியும் ஆகம சம்பிரதாயங்களின்படியும் சிறப்பாக நடைபெற்று வந்த வருடாந்த திருவிழாக்களின் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (29.07.2026)ஆம் நாள் திருவிழா மிகச் சிறப்பாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது.
​விழா நாளன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார உற்சவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகளும் நைவேத்தியங்களும் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான், விநாயகப் பெருமான் மற்றும் பரமசிவன்-பார்வதி தேவியருடன் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


​தனைத் தொடர்ந்து, இன்று (30) அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கும் வசந்த மண்டபப் பெருமானுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தீர்த்தக் கேணியை அடைந்தார்.


​அங்கு சிவாச்சாரியார்களின் வேதபாராயண முழக்கங்கள் மற்றும் பக்தர்களின் பக்திப் பரவசமிக்க "அரோகரா" கோஷங்களுக்கு மத்தியில், சிவாகம முறைப்படி தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவேறியது. இத்தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
புதியது பழையவை