மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வின் போது, அன்னதானம் வழங்கியவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை (29.07.2026)ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றிய முழுமையான விவரம்...
குறித்த ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது உணவைப் பெற்றுக்கொண்ட இளைஞர் ஒருவர், "உணவு சரியில்லை" எனக் கூறி அன்னதானம் வழங்கியவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருசாராருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையை அடுத்து, அவ்விடத்திற்கு வந்த 7 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் அன்னதானம் வழங்கியவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண்கள் இருவர் உட்பட 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுள் இருவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஏறாவூர் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.