ஸ்தம்பித்தது மட்டக்களப்பு ஆட்பதிவு திணைக்களம் - பொதுமக்கள் சொல்லொணாத் துயரம்!

​மட்டக்களப்பு ஆட்பதிவு திணைக்களத்தின் சீரற்ற செயற்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக, அத்தியாவசியச் சேவைகளைப் பெற வரும் பொதுமக்கள் தினமும் கடும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.

​சிறு திருத்தத்திற்கும் பலமுறை அலைச்சல்
​தேசிய அடையாள அட்டையில் உள்ள மிகச் சிறிய பிழைகளைத் திருத்துவதற்குக் கூட பொதுமக்கள் இரண்டு, மூன்று தடவைகள் திணைக்களத்தின் வாசற்படியை ஏற இறங்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

​தொலைதூரப் பகுதிகளிலிருந்து பெரும் பண விரயத்திற்கும் நேர விரயத்திற்கும் மத்தியில் வரும் ஏழை எளிய மக்கள், அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில்கள் எதுவுமின்றி வெறுங்கையுடன் திரும்பும் நிலை தொடர்கிறது.

​காலியாக இருக்கும் நாற்காலி... பதிலும் இல்லை, பொறுப்பும் இல்லை!

​இந்தக் குளறுபடிகள் குறித்து ஆட்பதிவு திணைக்களத்தின் தரப்பிடம் வினவியபோது, “முன்னர் இருந்த அதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். அவருக்குப் பதிலாக இதுவரை புதிய அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை” என்ற அதிர்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது.

​ஒரு முக்கிய அரச திணைக்களத்தின் பொறுப்பான அதிகாரி பதவி நீண்ட நாட்களாக வெற்றிடமாக இருக்கும் வரையில், அதனை நிரப்புவதற்கு மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனச் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

​உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..

​நிர்வாகச் சீர்கேடாலும் அதிகாரிகளின் அக்கறையின்மையினாலும் மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் அத்தியாவசியத் தேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

​எனவே, பொதுமக்களின் இந்த நியாயமான சிரமங்களுக்கு உடனடித் தீர்வுகாணும் வகையில், வெற்றிடமாக உள்ள பதவிக்குத் தகுதியான அதிகாரியை உடனடியாக நியமிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதியது பழையவை