களுவாஞ்சிகுடி சுகாதார அலுவலகப் பிரிவில் நுளம்புக் குடம்பிகள் கண்டெடுப்பு - 10 பேருக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது, நுளம்புக் குடம்பிகள் (கொசுப் புழுக்கள்) பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த பத்து பேருக்குக் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

​களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லார் மற்றும் கோட்டைக்கல்லாறு ஆகிய கிராமங்களில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான த. ரிஷிகோபன் மற்றும் எஸ். ரவிகரன் ஆகியோரால் விசேட களப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

​இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை அசட்டையாகவும் தூய்மையற்றதாகவும் வைத்திருந்த நபர்களுக்கு எதிராகத் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் சுகாதாரப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

​இவ்வழக்கு நேற்று (18.08.2026) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்ட பத்து நபர்களுக்கும் தலா 2,500 ரூபா,5000 ரூபாய்  வீதம்,  தண்டப்பணத்தை செலுத்துமாறு நீதிவான் தீர்ப்பளித்தார்.

​சுகாதாரப் பிரிவினரின் அவசர வேண்டுகோள்..!

பிராந்தியத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், காணிச் சூழலையும் நுளம்புகள் பெருகாதவாறு எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

புதியது பழையவை