நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான கேபிள்களை வெட்டி, செம்புக் கம்பிகளைத் திருடி வந்த இருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக மேல்குளம் வீதி மற்றும் சந்ததென்ன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கேபிள் திருட்டுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 5 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்....
பழனி அப்பன் தங்கராஜ் (40 வயது) – கந்தபொல.
ராமநாதன் மாதவன் (30 வயது) – ஹாலிஎல (தற்காலிகமாக ஹாவாஎலியவில் வசிப்பவர்).
சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோகிராம் செம்புக் கம்பிகள், 344 அடி நீளமான செம்பு அல்லாத கம்பிகள், அகற்றிய கேபிள் ரப்பர் உறைகள் மற்றும் கம்பிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 2 விசேட கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் புத்திகா தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க மற்றும் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமிந்த சஞ்சீவ ஆகியோரின் வழிகாட்டலில், நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.